ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கோட்டமாளம் வனப்பகுதியிலிருந்து வழிதவறி வந்த 10 வயதுள்ள ஆண்யானை உடல்நலம் சரியில்லாமல் அப்பகுதியில் உள்ள கிராமங்களில் சுற்றித் திரிந்தது. கிராம மக்கள் இரு நாள்களாக அதற்கு தண்ணீர் அளித்துவந்தனர். ஆனால், யானை காட்டுக்குள் செல்லாமல் அதே இடத்தில் நின்றபடி இருந்தது.
இதனால், அக்கிராம மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்து கால்நடை மருத்துவர் அசோகன் தலைமையிலான மருத்துக்குழுவினர் யானையின் உடலை ஆய்வுசெய்து அதன் நடவடிக்கையை கவனித்தனர்.
அப்போது, அந்த யானை உணவு சாப்பிட முடியாமல் உடல்நிலை மோசமாக இருப்பதைக் கண்டு, அதற்கு சிகிச்சை அளிக்க உடலில் துப்பாக்கியால் மயக்க மருந்து செலுத்தினர். பின்னர் யானைக்கு தண்ணீர் ஊற்றி உடல் சூட்டைத் தணித்து சிகிச்சை அளித்தனர். இந்தச் சிகிச்சை மூலம் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அது மெதுவாக நடந்துசென்றது.
இது குறித்து வனத் துறையினர் கூறுகையில், "தற்போது கோடைகாலம் என்பதால் யானைகள் தண்ணீரின்றி குட்டை நீரைப் பருகுவதால் இதுபோன்ற குடற்புழு நோயால் பாதிக்கப்படும். யானையின் நடமாட்டத்தை மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்துவருகிறது" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:சூளகிரியில் 13 காட்டு யானைகள் தஞ்சம் - மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை