ஈரோடு: சத்தியமங்கலம் அருகேவுள்ள அய்யம்பாளையம் கிராமத்திலுள்ள தொட்டம்மா, சின்னம்மா என்றழைக்கப்படும் மகாலட்சுமி, பொம்மையன் பொம்மி கோயிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்துக்கொள்ளும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இதன்படி இந்தாண்டு இவ்விழாவில் கலந்துகொள்வதற்கு கோயம்புத்தூர் மாவட்டம், கல்வீராம்பாளையம், வடவள்ளி, உச்சையனூர், தடாகம், வரப்பாளையம், பன்னிமடை, தீத்திபாளையம், ஓநாய்பாளையம், பூச்சியூர், சுண்டப்பாளையம், தொண்டாமுத்தூர் உள்பட பல கிராமங்களிலிருந்து 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அய்யம்பாளையம் கிராமத்துக்கு வந்தனர்.
மகாலட்சுமி, பொம்மையன், பொம்மி ஆலயங்களில் அலங்கார பூஜை, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் தாரை தப்பட்டை முழங்க மூன்று ஆலயங்களிலும் சாமி முன்பு வைக்கப்பட்டுள்ள தேங்காய்களை பக்தர்கள் எடுத்து, தங்களது தலையில் உடைத்து வழிபாடு நடத்தினர்.
விழாவில் கோயில் பூசாரி சாட்டையால் தனக்குத்தானே அடித்துக்கொண்டபடி வேல் கம்பை எடுத்துக்கொண்டு ஆடிய காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மகாசிவராத்திரியன்று விடிய விடிய திருவிழா கொண்டாடுவதாக அய்யம்பாளையம் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழா!