ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சூசைபுரம், தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர்ப் பகுதியில் கால்நடை வளர்ப்பு முக்கியத் தொழிலாக உள்ளது.
இந்நிலையில் வனத்திலிருந்து வரும் சிறுத்தை, கால்நடைகளைக் கொன்று சாப்பிட்டுப் பழகியதால் மக்கள் குடியிருப்புப் பகுதியில் தங்கிவிட்டது. பகலில் குவாரியில் பதுங்கிக்கொள்வதும் இரவு நேரத்தில் விவசாய நிலத்தில் புகுந்து ஆடு, மாடுகளைக் கொன்று தின்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போது காவல் நாய்களையும், அச்சிறுத்தை விட்டு வைக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வந்தனர்.
இப்பகுதியில் கால்நடைகளை வேட்டையாடி வருவதாலும், சிறுத்தை கல்குவாரியில் பதுங்கிக்கொள்வதாலும் சிறுத்தையைப் பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். சிறுத்தையைப் பிடிக்கக் கூண்டு வைத்தும் சிறுத்தை சிக்கவில்லை.
இந்நிலையில் பீம்ராஜ்நகர்ப் பகுதியில் உள்ள கல்குவாரியில் சிறுத்தை கல்குவாரி மீது படுத்திருந்தது. இதை அங்கு மாடு மேய்க்கும் விவசாயி படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் வனத்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
வனத்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டு, சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.
விவசாயிகளை அச்சுறுத்தும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடிக்கவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: #HBDSuperstarRajinikanth - இவன் திரையுலகை அதிரவைத்த அதிரடிக்காரன்