ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச்சரகத்தையொட்டியுள்ள மரியபுரத்தில் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. வனத்தையொட்டியுள்ள பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு மாலையில் அழைத்து வரப்படுவது வழக்கம். இந்நிலையில், மரியபுரத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி என்பரின் பட்டியில் இருந்த ஆடுகளை வனத்திலிருந்து வந்த சிறுத்தை வேட்டையாடியது. அதில், ஒரு ஆட்டை சிறுத்தை கடித்து இழுக்கும் போது கிராம மக்கள் சப்தம் போட்டதால் சிறுத்தை ஆட்டை விட்டு சென்றது. அதைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில் செந்நாய்கள் கூட்டமாக வந்து 4 ஆடுகளை கடித்துக்கொன்றன.
தொடர்ந்து வனவிலங்குகள் அட்டகாசத்தால் அச்சமடைந்த அந்தோணிசாமி, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த வனத்துறையினர், பட்டாசு வெடித்து வனவிலங்குகள் வராதபடி நடவடிக்கை எடுத்தனர். சிறுத்தைகள் வேட்டையாடி பழகியதால் தொடர்ந்து உலாவும் என கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தை மீண்டும் வராதபடி கூண்டு வைத்து பிடிக்கவும் உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கால்நடை மேய்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.