ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள விவசாய தோட்டங்களில் அவ்வப்போது சிறுத்தை புகுந்து கால்நடைகளை வேட்டையாடுவது வாடிக்கையாக உள்ளது. வனத்துறையினர் சிறுத்தையை பிடிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக நகர்ப்பகுதியை ஒட்டியுள்ள கொண்டையம்பாளையம், பெரியூர், ஜல்லியூர், பெரியகுளம் ஆகிய பகுதியில் ஆடு, மாடுகளை சிறுத்தை கொன்றதால் விவசாய பணிகளை மேற்கொள்ள மக்கள் அச்சப்படுகின்றனர்
இந்நிலையில், கோப்புப்பள்ளம் விவசாயி தோட்டத்திலிருந்த காவல் நாயை சிறுத்தை கொன்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், சிறுத்தையின் வழித்தடத்தை ஆய்வு செய்து கூண்டு வைத்தனர்.
அதில், சிறுத்தையால் கொல்லப்பட்ட நாயின் உடலை இரையாக வைத்து கண்காணித்தனர். வனத்துறை எதிர்பார்த்தபடியே இறைச்சியை சாப்பிட வந்த சிறுத்தை கூண்டில் மாட்டிக்கொண்டது.
இதையடுத்து, 3 வயதான பெண் சிறுத்தையை தனி வாகனத்தில் ஏற்றி காராட்சிக்கொரை வனகால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதணை செய்தனர். சிறுத்தையின் உடல்நிலை சீராக இருந்ததால், தெங்குமரஹாடா காட்டில் சிறுத்தை வனத்துறையால் விடுவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் திருடர்கள் எனக் கருதி, 3 பேரைக் கொலை செய்த மக்கள்!