ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி வனக்கோட்டத்தில் உள்ள சிக்கள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாதேவப்பா ஆடு, மாடுகள் வளர்த்துவருகிறார். இந்நிலையில் இவர் வழக்கம்போல நேற்று (மே 27) தனது நான்கு மாடுகளை சிக்கள்ளி வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். மாடுகள் மேய்ச்சல் முடிந்து வீடு திரும்பும்போது பசுமாடு ஒன்று சிறுத்தை தாக்கியதில் பலத்த காயமடைந்த நிலையில் வந்தது.
இது குறித்து கால்நடை மருத்துவர், வனத் துறையிருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்குவந்த வனத் துறையினர், கால்நடை மருத்துவர் தலைமையில் சிறுத்தையால் பாதிக்கப்பட்ட மாட்டுக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி மாடு உயிரிழந்தது. சிறுத்தைகள் அதிகமாக உள்ளதால் மாடுகளை மேய்ச்சலுக்கு காட்டுக்குள் ஓட்டிச் செல்ல வேண்டாம் என வனத் துறை எச்சரித்துள்ளது.
அதே மாவள்ளம் பகுதியைச் சேர்ந்த அர்ஜூன் என்பவரின் இரண்டு எருமைகளையும் சிறுத்தை தாக்கிக் கொன்றது. இது குறித்து அர்ஜுன் ஆசனூர் வனத் துறையினரிடம் இழப்பீடு கேட்டு கோரிக்கை மனு அளித்துள்ளார்.