ஈரோடு, பெருந்துறை நந்தா அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 22 இடங்களில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனையை நேற்று முன்தினம் முதல் மேற்கொண்டனர்.
ஈரோடு, பெருந்துறையில் நந்தா அறக்கட்டளையின்கீழ் இயங்கிவரும் நந்தா சிபிஎஸ்இ பள்ளி, மெட்ரிக் பள்ளி, நந்தா பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, சித்தா கல்லூரி, பார்மசி கல்லூரி, நர்சிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அறக்கட்டளையின் தலைவர் சண்முகன் பண்ணை வீடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் கோவையிலிருந்து வந்த 20-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறையினர் நேற்று முன்தினம் முதல் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்தத் திடீர் சோதனையில் வருமானவரித் துறையினர் ஐந்து கோடி ரூபாய்,150 கோடி ரூபாய்க்கான ஆவணங்களைக் கைப்பற்றினர்.
நந்தா அறக்கட்டளையின் தலைவர் சண்முகனிடம் வருமானவரித் துறையினர் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டதுடன் அறக்கட்டளையின் செயலாளர்களாக உள்ள அவரது இரண்டு மகன்களான பிரதீப், திருமூர்த்தி ஆகியோரை பெருந்துறையில் உள்ள அறக்கட்டளையின் தலைமை அலுவலகத்திற்கு அழைத்து வந்து தீவிரமான விசாரணை மேற்கொண்டனர்.