ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கென மருத்துவமனை, போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகள் படிக்கும் விதமாக போக்குவரத்து மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்பட்டன.
மொத்தம் 150 இடங்கள் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகள் மருத்துவம் பயின்று வருகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து துறையில் ஏற்பட்ட தொடர் இழப்பால் பெருந்துறை போக்குவரத்து மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியை சுகாதாரத்துறையின் கீழ் மாற்றி 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து தற்போது போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகள் மட்டுமின்றி பல்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வை எழுதி மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொண்டு பெருந்துறை போக்குவரத்து மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகின்றனர்.
அரசு மருத்துவக் கல்லூரியில் கல்வி கட்டணமாக 13 ஆயிரத்து 600 ரூபாய் பெற்று வரும் நிலையில், பெருந்துறை போக்குவரத்து மருத்துவக் கல்லூரியை அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றியும் தனியார் மருத்துவக் கல்லூரியில் கட்டணமாக வசூலிக்கப்படும் 3 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்யை போக்குவரத்து மருத்துவக் கல்லூரியிலும் வசூலித்து வருவதாக மாணவர்களின் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், மாணவ - மாணவியர்களின் பெற்றோர் 100க்கும் மேற்பட்டோர், ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கக்கோரி மனு அளித்தனர். மேலும், பெருந்துறை போக்குவரத்து மருத்துவக் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்கப்பட்டதால், ஏழை குழந்தைகள் அதிக கட்டணம் கட்ட முடியாமல் அவதிப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.
இதையும் படிங்க:மதுரையில் கருணாநிதிக்கு சிலை வைக்கக் கோரிய வழக்கு: 8 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவு!