ஈரோடு: ஈரோடு மாநகரின் மையப் பகுதியில் உள்ள வடக்கு காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம், மொடக்குறிச்சி காவல் நிலையம் மற்றும் பெருந்துறை காவல் நிலையப் பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக வீடுகளில் ஆட்கள் இல்லாத நேரத்தில், கொள்ளையர்கள் வீட்டின் பீரோவில் இருந்த நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தது தொடர் கதையாகி வந்துள்ளது.
இதனையடுத்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், சிறையில் இருந்து வெளியே வந்த பழைய குற்றவாளிகளின் தகவல்களையும், கடந்த மூன்று மாதங்களாக ஆய்வு செய்த தனிப்படை காவல்துறையினர், திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கண்காணித்து வந்துள்ளனர்.
அப்போது, பெருந்துறை அருகே மேட்டுக்கடை வாய்க்கால் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த 4 பேரை பிடித்து, தனிப்படை காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். இந்த விசாரணையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த தேனி மாவட்டம் ஓசைப்பட்டி உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபல கொள்ளையர் கணேசன் என்பது தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்லாமல், கணேசன் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 74 வழக்குகள் நிலுவையில் உள்ளதும், 15 வழக்குகளில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
மேலும் பிரபல கொள்ளையர் கணேசன் உடன் சேர்ந்து, மண்டபம் இலங்கை முகாமில் வசித்து வந்த ஆண்டனி ராபின்சன் என்ற நிசாந்தன், திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த தெளபிக் ரகுமான், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த தையார் சுல்தான் என்ற தாஸ் ஆகிய 4 பேரையும் நேற்று (நவ.28) போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், 4 பேரிடம் இருந்த 78 பவுன் தங்க நகை மற்றும் கொள்ளைச் சம்பவத்துக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் ஆகியவற்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர், சென்னிமலை பகுதியில் ஆகாய கொலை சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் குற்றவாளிகளைப் பிடிக்க உள்ளதாகவும் கூறினார்.
மேலும், “ஈரோடு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவிகள் பேருந்து நிலையம் விரிவாக்கம் பணிக்காக அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் பொருத்தப்படாமல் உள்ளதை சமூக விரோதிகள் மற்றும் திருநங்கை என்ற பெயரில் வரும் மோசடி நபர்கள் தினந்தோறும் மோசடியில் ஈடுபடுவதுடன், வழிப்பறி சம்பவத்திலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கூட்டம் நடத்தி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்து செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கூறினார்.
பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்த சம்பவம்: மேலும் கோபிசெட்டிபாளையம் அருகே சிறுவலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு பட்டியலின இளைஞர்கள் ஆடு கோழிகளைத் திருடியதாக பொதுமக்கள் கட்டி வைத்து அடித்த விவகாரத்தில், பட்டியலின இளைஞர்களை சாதியின் பெயரைச் சொல்லி திட்டியதுடன், அவர்கள் மீது சிறுநீர் கழிக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
அதோடு, கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவர் தொடர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர் எனவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் தெரிவித்துள்ளார். ஈரோடு நகரப் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: வேங்கை வயல் விவகாரம்; உண்மை கண்டறியும் பரிசோதனைக்கு சிபிசிஐடி கோரிக்கை.. வழக்கின் முழு விபரம்!