தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்குத் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த வாரத்தில் தடுப்பூசி பற்றாக்குறையால் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் தற்போது அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டு, பொது மக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சத்தியமங்கலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், உக்கரம் ஆரம்ப சுகாதார நிலையம், புஞ்சை புளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடுவதற்காக வந்த பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன்களை பெற்றுக் கொண்டனர்.
சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி, ராஜன் நகர், உக்கரம் பகுதிகளில் மட்டும் நேற்று (ஜூன்.19) 2,100 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
புஞ்சை புளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மதியத்துக்கு மேல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிய நிலையில், மாலை வரை நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
இருப்பினும் கடைசியாக வந்தவர்களுக்கு டோக்கன்கள் கிடைக்காததால் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.