ஈரோடு: தமிழக மது விலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி வகித்து வந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சராக உள்ள சு.முத்துசாமியிடம் வழங்கப்பட்டு உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதுக்குப் பின்பு தமிழக அரசு, தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட மதுபான கடை மற்றும் பார்களை ரத்து செய்தது. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத மற்றும் உரிய அனுமதி பெறாமல் மதுபானங்கள் விற்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்தன.
அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் மொத்தமாக 250 அரசு மதுபான கடை மற்றும் பார் வசதியுடன் கூடிய கடைகள் செயல்பட்டு வந்தன. தொடர்ந்து கடைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு 207 அரசு மதுபான கடைகள் பார் வசதியுடன் செயல்பட்டு வந்தன. தற்போது அது மேலும் குறைக்கப்பட்டு பார் வசதியுடன் 183 அரசு மதுபான கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: தமிழகத்தில் 70 லட்சம் பேருக்கே உரிமைத்தொகை வழங்கவுள்ளது கண்டனத்திற்குரியது - பாஜ பிரமுகர் கண்டனம்
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கந்தசாமி பாளையம் ரவுண்டானா பகுதியில் அரசு மதுபான கடை எண் 3549 அருகே உரிய அரசு அனுமதியின்றி 24 மணி நேரமும் பாண்டிச்சேரி மற்றும் தமிழக மதுபானங்கள் உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் ஆதரவுடன் விற்கப்படுவதாக புகார் எழுந்தது.
மேலும் இந்த சட்டவிரோத மாதுபானங்களை சாரதி என்பவர் ஆட்களை வேலைக்கு வைத்து இரவு பகலாக விற்பனை செய்து வருதாக புகார் எழுந்து உள்ளது. தமிழக மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமியின் சொந்த மாவட்டத்திலேயே 24 மணி நேரமும் பாண்டிச்சேரி மற்றும் தமிழக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் சட்டவிரோத மதுபான விற்பனை குறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ காட்சிகள் காண்போரை அதிருப்தி அடையச் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 12 மணிநேரத்தில் 17 நோயாளிகள் உயிரிழப்பு - தானே சத்ரபதி சிவாஜி மருத்துவமனையில் தான் இந்த சோகம்!