ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள நத்தக்காட்டுத்தோட்டம் கருப்புப்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி சசிகுமார். இவரது மனைவி, குழந்தைகளை ஈரோடு மாவட்ட அதிமுக புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளரும், தனியார் மருத்துவமனை மருத்துவருமான மகேஷ்ராஜா கடத்திச் சென்றதாக கூறி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சசிகுமார் புகார் மனு அளித்தார்.
மனு குறித்து விவசாயி சசிகுமார் கூறுகையில், "எங்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுது. 7 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தனக்கும் தனது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து தனது மனைவி, மகளுடன் அந்தியூரிலுள்ள அவரது தாயார் வீட்டுக்குச் சென்று வசிப்பதாக முடிவு செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தியூரில் வசித்து வருகிறோம்.
மேலும், கடந்த ஓராண்டாக அந்தியூர் தனியார் மருத்துவமனையிலுள்ள மருந்தகத்தில் எனது மனைவி பணியாற்றிவந்தார். இந்நிலையில், எனது மனைவி சுபத்ராவை மருத்துவமனை மருத்துவர், ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக தொழில்நுட்பப் பிரிவு செயலாளருமான மருத்துவர் மகேஷ்ராஜா ஆகியோர் ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளனர். மேலும், எனது மனைவியுடன் 7 வயது மகளையும் கடத்திச் சென்றுள்ளனர்.
தனது மனைவி தன்னுடன் சேர்ந்து வாழ்வதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது கடத்தி வைத்துள்ளனர். எனது மனைவி, மகளை மீட்டுத் தர வேண்டுமென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.