ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள புதுவடவள்ளி பகுதியில் அட்டமொக்கை காலனி அமைந்துள்ளது. இக்கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாய கூலித்தொழிலாளர்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், 23 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 42 குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டன.
இந்த வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால், கான்கிரீட் கூரையிலிருந்து காரைகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் ஒவ்வொரு வீடும் எலும்புக்கூடுகள்போல் காட்சியளிக்கிறது.
மழைக்காலங்களில் மேற்கூரையிலிருந்து நீர் ஒழுகுவதால் குழந்தைகளுடன் வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் நிலையில் இருக்கும் வீடுகளால் ஒருவித அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டித்தரவேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குடியிருப்புவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். பழுதடைந்துள்ள வீடுகள் இடிந்துவிழுந்து பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக, புதிய வீடுகளை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அட்டமொக்கை கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: 'பழுதடைந்த தொகுப்பு வீடுகள் சீரமைத்துத் தரப்படும்'- பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம்!