நாடு முழுவதும் நேற்று (ஆகஸ்ட் 22) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலில் உள்ளதால், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி எளிமையாகக் கொண்டாடப்பட்டது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோயில்களில் விநாயகருக்கு அர்ச்சகர்கள் மட்டும் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். தமிழ்நாட்டில் மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடினர்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழ்நாடு அரசு தடைவிதித்துள்ளது. அவரவர் வீடுகளில் சிலை வைத்து வழிபடலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்து முன்னணி அமைப்பு சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனால், தடையை மீறி மூன்றரை லட்சம் விநாயகர் சிலைகளை நிறுவுவோம் என இந்து முன்னணியின் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியது சர்ச்சை ஏற்படுத்தியது. இதனால் பொது இடங்களில் சிலைகள் வைக்கப்படுவதைத் தடுக்கவும், பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு முழுவதும் காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் சிறிய அளவிலான விநாயகர் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. அரசின் உத்தரவு விதிகளை மீறிச் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை தெரிவித்திருந்தார்.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் சிறிய விநாயகர் சிலை கொண்டு வந்து பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சிலையைக் காவிரி ஆற்றில் கரைக்கப்போவதாகக் கூறி எடுத்துச்சென்றார். ஊர்வலமாகச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இவரின் இந்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பவானி ஆறு, காவிரி ஆறு பகுதிகளில் பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பறிமுதல்!