ஈரோடு: ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நாவலர் வீதியைச் சேர்ந்தவர், நூற்பாலை தொழிலாளி பொன்னுச்சாமி (50). பொன்னுச்சாமியின் முதல் மனைவி வசந்தாமணி இறந்துவிட்ட நிலையில், போலியோ நோயால் பாதிக்கப்பட்ட நவீன்குமார் (30), இரண்டாவது மனைவி மற்றும் பொன்னுச்சாமியின் தாய் சுப்பம்மாள் (82) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இதில் நவீன்குமார் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு, சிறு வயது முதலே நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் நடமாடி வந்ததாகவும், நடக்க முடியாமல் இருந்த நவீன் குமாரை பாட்டி சுப்பம்மாள் பராமரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு பொன்னுச்சாமி வழக்கம் போல் வேலைக்குச் சென்று விட்ட நிலையில், இரண்டாவது மனைவி மற்றும் அவரது மகள் தனியார் கண் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். இந்த நிலையில், வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பொன்னுச்சாமி, தாய் சுப்பம்மாள் மற்றும் மகன் நவீன்குமார் ஆகிய இருவரையும் காணாததால் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் தேடியுள்ளார்.
பின்னர் வீட்டின் முன்புறம் உள்ள 15 அடி ஆழமுள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டியின் மூடி திறந்திருந்ததால் சந்தேகம் அடைந்து தொட்டிக்குள் பார்த்தபோது சுப்பம்மாள், நவீன் குமார் ஆகிய இருவரும் தொட்டியில் சடலமாக மிதந்து கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொன்னுச்சாமி, இது குறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரது சடலங்களை மீட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, போலியோ நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் பேரன் நவீன் குமார் சக்கர நாற்காலியில் நடமாடுவதைக் கண்டு மூதாட்டி சுப்பம்மாள் மனவேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மன விரக்தியில் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இது குறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போலியோ நோயால் பாதிக்கப்பட்ட பேரனுடன் மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பணம் தராததால் ஆத்திரம்! கஞ்சா போதையில் தாயை அடித்து கொன்று வீட்டில் புதைத்த மகன்!