ஈரோடு: கொல்லம்பாளையம் வ.உ.சி வீதியில் வசித்து வருபவர் மனோகர் (62). இவர் ரயில்வே பணியில் ஓய்வு பெற்ற ஊழியர். இவரது மனைவி புவனேஸ்வரி (53) , வைரா பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. இந்நிலையில், பள்ளி வார விடுமுறை என்பதால் ஆசிரியை புவனேஸ்வரி வீட்டிலிருந்துள்ளார்.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 20) அதிகாலை 6.30 மணிக்குக் கணவர் மனோகர் நடை பயிற்ச்சிற்காக வெளியே சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்குத் திரும்பி வந்து பார்த்த போது, அங்கு படுக்கை அறையில் மனைவி புவனேஸ்வரி, கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் குறித்து ஈரோடு தெற்கு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் உயிரிழந்து கிடந்த புவனேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: மாமூல் கேட்டு மிரட்டி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய வழக்கு - தனியார் மாத இதழ் ஆசிரியர் கைது!
மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டு தடயங்களைச் சேகரித்த போலீசார், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரது கணவர் மனோகரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் மர்மமான முறையில் அரசு பள்ளி ஆசிரியை கழுத்தில் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தெற்கு காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டபகலில் ஆசிரியையை வீட்டில் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வேலூரில் குழந்தை கடத்தல்; 8 மணிநேரத்தில் கூண்டோடு கைது செய்த போலீஸ்!