ஈரோடு மாவட்டம் பாசூரில் கதவணை மின் உற்பத்திக்காக காவிரியாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. ஈரோடு - நாமக்கல் ஆகிய இரண்டு மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த பாலத்திற்கான சாலையில் கடந்த வாரம் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
இதனையடுத்து அந்த வழியாக போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சாலை சரிசெய்யும் பணிகளை தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி , நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ், மற்றும் அரசு அலுவலர்களுடன் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் தங்கமணி, “பாசூர் கதவணை பகுதிகளில் சாலைகளில் ஏற்பட்டுள்ள மண் சரிவு சரிசெய்யப்பட்டு வருகிறது. மேலும் அந்தப் பகுதியில் எப்போதும் மண் சரிவு ஏற்படாத வண்ணம் சாலைகள் சரி செய்யப்படும். மக்கள் பாதுகாப்பாக செல்ல நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றோம். இன்னும் 10 நாட்களில் போக்குவரத்து சரி செய்யப்படும்.
விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அரசு மேற்கொள்ளாது. உயர் மின் கோபுரம் அமைப்பது தொடர்பாக விவசாயிகள் தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளனர். அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே சிலர் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். கேரள மாநிலத்திலும் அதிக இடங்களில் மின் கோபுரங்கள்தான் அமைக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் பாதிக்கட்டும் என்ற எண்ணம் என்றைக்கும் அரசுக்கு கிடையாது. விவசாயிகளின் நஷ்ட ஈடுகளை அவர்கள் கேட்டதற்கிணங்க உயர்த்தி கொடுத்துளோம்” என்றார்.
இதையும் படிங்க: ''திமுகவினரின் சட்டையை கிழிங்க, வீட்டு கதவை உடைங்க" - அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு!