ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தையடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் மாக்கம்பாளையம், கோம்பை தொட்டி, கோவிலூர், அரிகியம் உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமத்திற்கு கடம்பூரில் இருந்து 25 கிலோ மீட்டர் அடர்ந்த வனப்பகுதி வழியாகத்தான் செல்ல முடியும். குறும்பூர் முதல் மாக்கம்பாளையம் வரை கரடுமுரடான மண் சாலையில் இரண்டு காட்டாறுகளை கடந்து செல்ல வேண்டும்.
இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 08) காலை சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் வழியாக மாக்கம்பாளையம் வனகிராமத்திற்கு அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது பகல் 2 மணியளவில் கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக குரும்பூர் பள்ளத்தில் மழை நீர் கரை புரண்டு ஓடியது. இதன் காரணமாக பேருந்து செல்லமுடியாமல் கரையிலேயே நின்றது.
இதனால் பயணிகள் காட்டாற்றை கடக்க முடியாமல் தவித்தனர். மாலை 7 மணியளவில் வெள்ளம் குறைந்ததைத் தொடர்ந்து பேருந்து கரையை கடந்து கடம்பூருக்கு சென்றது.
யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடும் அடர்ந்த வனப்பகுதியில் பயணிகள் கரையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர். மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் குரும்பூர், சக்கரை ஆகிய இரண்டு பள்ளங்களின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரையிலும் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்காததால் மாக்கம்பாளையம் பகுதி கிராம மக்கள் மழைக் காலங்களில் இதுபோன்ற மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உடனடியாக இந்த இரண்டு பள்ளங்களின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டித் தர வேண்டும் என்பது மாக்கம்பாளையம் பகுதி மலை கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: உடல்நலக்குறைவால் உயிரிழந்தது மக்னா யானை