ஈரோடு : சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனப்பகுதியில் தெங்குமரஹாடா, கல்லாம்பாளையம், அல்லிமாயாறு, நந்திபுரம் ஆகிய நான்கு வன கிராமங்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் பவானிசாகர் வழியாக அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் கரடுமுரடான மண் சாலையில் பயணிக்கும் இந்த அரசு பேருந்தில் அடிக்கடி பழுது ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
பாதியில் நின்ற அரசுப்பேருந்து
தெங்குமரஹடா வனப்பகுதியில் இருந்து பவானிசாகர் வழியாக கோத்தகிரி செல்வதற்காக அரசு பேருந்து வன கிராமங்கள் வழியாக சென்று கொண்டிருந்தது. காராச்சிக்கொரை வன சோதனைச்சாவடி அருகே சென்றபோது செல்ப் மோட்டார் பழுது காரணமாக எஞ்சின் ஆஃப் ஆகியதால் நகர முடியாமல் நின்றது.
இதைத்தொடர்ந்து பேருந்தில் பயணித்த வன கிராம மக்கள் பேருந்தை தள்ளி ஸ்டார்ட் செய்ய முயற்சித்தனர். சிறிது நேரம் பேருந்து இன்ஜின் ஸ்டார்ட் ஆகாததால் பேருந்தை தள்ளமுடியாமல் வன கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
ஒரு வழியாக புறப்பட்ட பேருந்து
பின்னர் ஒருவழியாக வேகமாக பேருந்தை தள்ளி ஸ்டார்ட் செய்த பின்னர் பேருந்து புறப்பட்டு சென்றது. தெங்குமரஹாடா வனப்பகுதிக்கு இயக்கப்படும் பேருந்து அடிக்கடி பழுது ஏற்படுவதாகவும், இது போன்று அடிக்கடி பேருந்தை தள்ளி ஸ்டார்ட் செய்ய வேண்டிய அவல நிலை உள்ளதால் வனப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு இயக்கப்படும் பேருந்தை நல்ல நிலையில் பராமரிக்கப் போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.