கரோனா பரவலை தடுக்க தமிழ்நாடு முழுவதும் ஜூலை மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வழியாக தமிழ்நாடு கர்நாடக மாநிலத்தை அமைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், முழு ஊரடங்கு என்பதால் இன்று அதிகாலை முதலே சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பண்ணாரி சோதனைச் சாவடியில் வாகனங்கள் இன்றி தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் ஒரு சில சரக்கு லாரிகள் மட்டும் பண்ணாரி அம்மன் கோயில் பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முழு ஊரடங்கு குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் சாலையில் வாகனங்களை இயக்குவது வெகுவாக குறைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஊரடங்கு குறித்து அறியாமல் வரும் வாகனங்களை சோதனைச்சாவடி காவல்துறையினர் திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முழு ஊரடங்கால் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை பரபரப்பின்றி அமைதியாக காணப்படுகிறது. அத்தியாவசிய பொருள்கள் கொண்டுச் செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு நீதி கிடைக்கவில்லை - பாமக நிறுவனர் ராமதாஸ்