சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் வனக்கோட்டத்தில் ஏராளமான யானைகள் நடமாடுகின்றன. இந்த கோட்டம் யானைகளின் முக்கிய வழித்தடமாகவும் யானைகள் இடம்பெயரும் பாதையாகவும் உள்ளது. கோடை காலத்தில் ஏற்பட்ட கடும் வெயிலால் குட்டைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகின்றது.
இதனால் யானைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயருகின்றன. மழைகாலத்தில் வெள்ளநீர் வழிந்தோடும் ஓடைகள் வெறும் தற்போது கற்களாகத் தெரிகின்றன.
இந்நிலையில் வனவிலங்குகளின் தாகத்தைத் தீர்ப்பதற்கு சத்தியமங்கலம் ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் செயற்கை வனக்குட்டைகள் உருவாக்கப்பட்டு, அதில் நீர் நிரப்பி வருகின்றனர்.
இதற்கென பிரத்யேகமாக தண்ணீர் லாரிகள் மூலம் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும் தலமலை, ஆசனூர், தாளவாடி, கேர்மாளம் என நான்கு வனச்சரகங்களில் 30க்கும் மேற்பட்ட வனக்குட்டைகளில் தண்ணீர் நிரப்பி வருவதால் யானைகள், எருமைகள், மான்கள், சிறுத்தை தண்ணீர் குடித்துவருகின்றன.
வனத்தில் ஆங்காங்கே குட்டைகளில் நீர் நிரப்புவதால் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதில்லை என, கிராம மக்கள் தெரிவித்தனர்.