திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ராசிபாளையத்திலிருந்து தருமபுரி மாவட்டம் பாலவாடி வரை 400 கேவி திறன் கொண்ட உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி 2014ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் வழியாக ஐந்து உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கோபுரங்கள் அமைக்கும் பணி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் மின் அழுத்த கோபுரங்களுக்கு எதிரான கூட்டியக்கத்தின் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மூலக்கரையில் உள்ள பூபதி, கீதா என்பவரது தோட்டத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விவசாயிகள் தங்களது கால்நடைகளை வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உயர் மின் கோபுர திட்டத்தால் விவசாய விளை நிலங்கள் மட்டுமின்றி மனித உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என கூறி முழக்கங்களை எழுப்பினர்.
இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் போரட்டக்கார்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்கள் போரட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.