ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பீக்கரிபாளையத்தை சேர்ந்தவர் பெரிய சடையன். இவர் மாடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். இவரிடம் இருந்த மாடுகளில் ஒன்று மட்டும் திடீரென காணாமல் போனது. இதையடுத்து பெரிய சடையன் அவரது உறவினரான மாதன் ஆகிய இருவரும் காணாமல் போன மாட்டைத் தேடி வனப் பகுதிக்குள் சென்றனர்.
அப்போது வனப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஒற்றை யானை, பெரிய சடையன், மாதன் இருவரை பார்த்ததும் வேகமாக துரத்த ஆரம்பித்தது. இதில் பெரிய சடையன் யானையிடமிருந்து தப்பி ஓடினார். மாதன் ஓடும்போது தவறி கீழே விழுந்து யானையிடம் சிக்கிக் கொண்டார். அவரை தும்பிக்கையால் மிதித்து பலமாக தாக்கியதில் மாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு பெரிய சடையன் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் வனச்சரகர் பெர்னாட் மற்றும் வனத்துறை ஊழியர்கள், உயிரிழந்த மாதன் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.