ஈரோடு: சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மலர் விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. மலர் விவசாயிகள் ஒன்றிணைந்து 1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு மலர்கள் உற்பத்தியாளர்கள் தலைமை சங்கம் என்கிற சங்கத்தை தொடங்கினர். இந்த சங்கம் விவசாயிகளிடம் இருந்து சுரண்டப்பட்ட இடைத்தரகர்களுக்கு எதிராக தொடங்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவசாயிகளால் - விவசாயிகளுக்காக முதன் முதலில் மலர்கள் சந்தை தொடங்கப்பட்டது. இச்சங்கம் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர் விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு சங்கத்தில் நிர்வாகம் சரியில்லை என்றும் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன என பிரச்னைகளை கிளப்பினர்.
இறுதியாக தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டு மலர் விவசாயிகள் சங்கத்திற்கு தேர்தல் நடைப்பெற்றது. இதில், 800க்கும் மேற்பட்ட மலர் விவசாயிகள் வாக்களித்தனர். ஆண்டு தோறும் பொதுக்குழு மற்றும் செயற்குழு நடத்துவது எனவும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி நிர்வாகிகளைத் தேர்வு செய்வது எனவும் சங்கத்தில் தீர்மானிக்கப்பட்டது.
சங்கத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் தாங்கள் பதவியேற்ற நாள் முதல் சங்கத்தின் சார்பில் வங்கி கணக்கு தொடங்கி வரவு செலவு செய்யாமல், தனிப்பட்ட முறையில் வங்கி கணக்கு தொடங்கி வரவு செலவு செய்து வருகின்றனர் என்பது தெரியவந்தது. மேலும் அதற்கு முறையான கணக்கை செயற்குழு, பொதுக்குழுவில் தாக்கல் செய்யாமலும், சங்கங்களின் பதிவாளர் முன்பும் தாக்கல் செய்யாமலும், மிகப்பெரிய அளவில் மோசடி செய்துள்ளனர்.
இது குறித்து பல்வேறு சமயங்களில் கேள்வி கேட்ட மலர்கள் விவசாயிகள் வருத்தமடைந்தனர். பின் நிர்வாகிகள் விவசாயிகளை சந்தையில் பூ விற்க விடாமல் புறக்கணிப்பு செய்து மிகப் பெரிய அளவில் மோசடி செய்துள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துறையினரிடமும், வருமான வருவாய்த்துறையினரிடமும் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், சங்கத்தின் உறுப்பினர்கள் பதிவாளரிடம் புகார் அளித்தும் அவர்களும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
எனவே கடந்த 2016 ஆம் ஆண்டு 32 பேரை மட்டும் கொண்டு தொடங்கப்பட்ட சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கம் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குச் சொந்தமான சொத்துக்களோடு, சுங்க பணத்தோடு இயங்கி வருகின்றது. இச்சங்கத்தில் அனைத்து மலர்கள் விவசாயிகளையும் உறுப்பினராக சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், சங்கத்தில் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் எனவும் நடைபெற்ற ஊழல் மோசடி குறித்து ஆதாரத்தோடு கொடுக்கப்பட்ட புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலர்கள் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டம் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டமாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து மலர்கள் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிராக ஊர்வலமாக வந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தங்கள் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் நிறைவேற்றி தர வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தினர். காவல் துறையினர் தடையை மீறி மலர் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:உள்ளூர் அரசுகளுக்கு கீழ் படியாவிட்டால் ட்விட்டரை மூடும் அவலம் - எலான் மஸ்க் ஆதங்கம்!