ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. கோடைகாலத்தை முன்னிட்டு இந்த வனச்சரகங்களில் கடும் வறட்சி நிலவிவருவதால் மரம், செடி, கொடிகள் காய்ந்து கிடக்கின்றன. இதனால் ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்பட்டுவருகிறது. இந்நிலையில், தாளவாடி அருகு ஜீர்கள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட கொங்கள்ளி வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது. மரம், செடிகள் காய்ந்து கிடப்பதால் தீ மளமளவென பற்றி எரியத்தொடங்கியது.
இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாகக் காணப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஆசனுார் தீயணைப்பு வாகனம் வந்தாலும், அடர்ந்த வனப்பகுதி என்பதால் வாகனம் செல்ல முடியவில்லை. இதனால் நடந்துசென்று தீயணைப்பு வீரர்களும், வனத் துறையினரும் இலை தழைகளைக் கொண்டு காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 8 மணிநேரம் போராடி காட்டுத் தீயை அணைத்தனர். இதில் பல அரியவகை மரம், செடி, கொடிகள் எரிந்து நாசமாகின.