ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் வனச்சரகத்தில் உள்ள பண்ணாரி வனப்பகுதியில் புதுப்பீர்கடவு கிராமம் அருகே மலைப் பகுதியில் நேற்று (ஜூன்.10) இரவு சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த பவானிசாகர் வனத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பவானிசாகர் வனப்பகுதியில் பரவலாக மழை பெய்து வனப்பகுதி பசுமையாக உள்ள நிலையில் வனப்பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்க்க சென்றவர்கள் அல்லது புல் அறுக்கச் சென்றவர்கள் பீடி குடித்துவிட்டு அணைக்காமல் எறிந்திருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், காட்டுத்தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த இடம் முழுக்க தீ பற்றியதால் அரியவகை மரம், செடி, கொடிகள் தீயில் கருகி சேதமடைந்தன.