ஈரோடு வீரப்பன்சத்திரம் அருகேயுள்ள காவிரி சாலையில் 50க்கும் மேற்பட்ட விசைத்தறி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியிலுள்ள விசைத்தறி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் விலையில்லா வேட்டி, சேலை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதே பகுதியில் நாராயணன் என்பவருக்குச் சொந்தமான விசைத்தறி நிறுவனத்திலும் விலையில்லா வேட்டி, சேலை நெய்யும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், அவரது விசைத்தறி தொழிற்சாலையில் திடீரென கடும் புகையுடன் தீப்பற்றியெரியத் தொடங்கியது. மேலும், பலத்த காற்று வீசியதால் பற்றிய தீ மளமளவென இயந்திரங்கள், பாவு, இருப்பு வைத்திருந்த துணிகள் மற்றும் நூல்களில் பரவியது.
இதனால் தொழிற்சாலையிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து ஈரோடு தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் இந்த தீ விபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், பாவு, துணி மற்றும் பொருள்கள் தீயில் எரிந்து நாசமாயின. இது குறித்து வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.