ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி பாசன கால்வாய், தடப்பள்ளி அரக்கன்கோட்டை, காலிங்கராயன் கால்வாய்களுக்குப் பாசனத்திற்கு ஆண்டுதோறும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளாக நல்ல மழை பெய்து அணையின் நீர்மட்டம் திருப்தியளித்திடும் வகையில் இருப்பதால் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு-வருகிறது. இதன்மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான ஏக்கர் வேளாண்மை நிலம் பாசன வசதி பெற்றுவருகிறது.
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான கேரள மாநிலம், நீலகிரி பகுதிகளில் கடந்த மாதம் தொடர்ந்து கனமழை பெய்ததன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 100 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்புக் கருதி கீழ்பவானி பாசன கால்வாய்க்கு முதல் போகத்திற்கும், தடப்பள்ளி அரக்கன்கோட்டை, காலிங்கராயன் கால்வாய் உள்ளிட்ட பாசனப் பகுதிகளுக்கு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து கனமழை பெய்துவருவதாலும், அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுள்ளதாலும் விவசாயிகள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியுடன் வேளாண்மைப் பணியைத் தொடங்கியுள்ளனர்.
கீழ்பவானி பாசன கால்வாய் பகுதியில் பெரும்பான்மையான விவசாயிகள் நெற்பயிர்களையும், வாழைகளையும், கரும்புகளையும் அதிகளவில் சாகுபடி செய்வதால் அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளையும், சாகுபடிக்கான தயார் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
வயல்வெளிகளைச் சீரமைத்து, நாற்றுகளை நடவு செய்வதற்கான அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டுள்ள விவசாயிகள் மழைக்காலம் முடிவதற்குள் நடவுப் பணிகளை முடித்துவிட வேண்டுமென்கிற ஆர்வத்தில் வேளாண்மைப் பணிகளை கூடுதல் விவசாயத் தொழிலாளர்களுடன் மேற்கொண்டுவருகின்றனர்.
விவசாயிகள் சிலர் குறுகிய காலப் பயிர்களைப் பயிரிடவும் திட்டமிட்டு அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
விவசாயிகள் தங்களது சாகுபடிப் பணிகளை மேற்கொண்டுவருவதால் இந்தாண்டு வேளாண்மைப் பயிர்களின் விளைச்சல் நல்லமுறையில் இருக்கும் என்கிற கூடுதல் எதிர்பார்ப்பிலும், தொடர் மழையின் காரணமாக எவ்விதத் தண்ணீர் தட்டுப்பாடுமின்றி விவசாயப் பணிகள் நடைபெறும் என்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியில் திளைத்துவருகின்றனர்.
இதையும் படிங்க: ஏழையிடம் ஆம்புலன்ஸ் சேவைக்கு பணம் கேட்ட ஓட்டுநர்!