ஈரோடு: தமிழ்நாடு- கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது தாளவாடி மலைப்பகுதி.
இங்கு வசிக்கும் காட்டு யானைகள் இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து, சாகுபடிக்கு தயாரா நிலையில் இருக்கும் வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
விளைநிலங்களுக்குள் புகுந்த யானைகள்
தாளவாடி மலைப்பகுதியில் அருகே உள்ள பையனாபுரம் வனப்பகுதியில் இருந்து இன்று (ஜூன் 9) அதிகாலை வெளியேறிய காட்டு யானைக்கூட்டம் அப்பகுதியில் உள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின.
இதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து, பட்டாசுகள் வெடித்தும், சத்தமிட்டும் காட்டு யானைகளை விரட்டினர். இதையடுத்து, விளைநிலங்களில் இருந்து வெளியேறிய யானைகள், பையனாபுரம் பகுதியிலிருந்து கர்நாடக மாநிலம் செல்லும் தார் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றன.
தினமும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வரும் நிலையில், வனப்பகுதியை ஒட்டி ஏற்கனவே வெட்டப்பட்டுள்ள அகழியை அகலப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வருவாய் துறையினர் துணையுடன் ஏரிகளில் மணல் கடத்தல்: நடவடிக்கை எடுக்கக்கோரி மனு!