ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானிவாய்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் சத்தியமங்கலம் வட்டாரத்தில் சுமார் 15 ஆயிரம் விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். தற்போது நெற்கதிர்கள் முதிர்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் நெல் அறுவடை செய்து வருகின்றனர்.
சத்தியமங்கலம் அடுத்த செண்பகபுதூர், மாரானூர், பெரியூர் உள்ளிட்ட பகுதிகளில் தினம்தோறும் 10 ஆயிரம் மூட்டைகள் வரை நெல் மகசூல் கிடைப்பதால் நெல்லை அந்தந்த களத்தில் போட்டு வைத்துள்ளனர். அரசு கொள்முதல் மையங்களில் ஏ கிரேடு ரக நெல் ஆயிரத்து 958 ரூபாய்க்கும் சாதாரண ரகம் ஆயிரத்து 918 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.
தனியார் வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்பதால் விவசாயிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக கழக கொள்முதல் மையத்தில் விற்பனை செய்வதற்கு ஆர்வம் காட்டிய நிலையில் செண்பகபுதூரில் ஒரேயொரு நேரடி மையம் மூலம் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
தினம்தோறும் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் அறுவடையாகும் நிலையில் ஆயிரம் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் நிலையத்தில் விற்பனையாகிறது. இதனால், பிற விவசாயிகள் நெல்லை களத்தில் போட்டு வைத்து காத்திருக்கின்றனர். மழை, பனி போன்ற இயற்கை சீற்றத்தால் நெல் விவசாயிகள் பாதிக்கப்படுவதற்கு முன்பாக மேலும் இரு நெல் கொள்முதல் நிலையங்களை திறக்குமாறு அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மறைமுக ஏல முறையில் நெல், எள் போன்ற தானியங்கள் ஏலம்