ஈரோடு: தாளவாடி அருகே உள்ள சேஷன்நகர் பகுதியைச் சேர்ந்தவர், சிவராஜ். வயது 37. விவசாயியான இவர் தனது விவசாய தோட்டத்தில் மாடுகள் பராமரித்து வந்தார். இவரது மாடுகள் அப்பகுதியில் உள்ள தரிசு நிலத்தில் மேய்வதற்காக விட்டிருந்த நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடுகள் வீடு திரும்பவில்லை எனத் தெரிகிறது.
இந்த நிலையில் விவசாயி சிவராஜ் மாடுகளை தேடிச் சென்றபோது, மேய்ச்சல் நிலத்தில் ரத்தக்காயங்களுடன் ஒரு பசுமாடு இறந்து கிடந்தது. மேலும் மற்றொரு பசு மாடு பலத்த ரத்தக் காயத்துடன் உயிருக்குப் போராடிய நிலையில் படுத்திருந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி சிவராஜ் வனத்துறையினருக்குத் தகவல் தெவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாளவாடி வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது புலியின் கால் தடம் பதிவானதை கண்டறிந்தனர்.
இரவு நேரத்தில் மேய்ச்சல் நிலத்தில் படுத்திருந்த பசு மாடுகளை, புலி தாக்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் புலி நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக தானியங்கி கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, இதே பகுதியில் புலி நடமாட்டம் இருந்ததோடு கால்நடைகளை வேட்டையாடிய நிலையில் தற்போது மீண்டும் அப்பகுதியில் புலி கால்நடைகளை வேட்டையாடத் தொடங்கியுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். கால்நடைகளை வேட்டையாடும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:ஆலங்குளத்தில் கிணறுதோண்டும் பணியில் 3 பேர் பலி - வெடிபொருட்களை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரம்