சத்தியமங்கலம் அருகே உள்ள பீக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தங்கவேல். அப்பகுதியில் உள்ள தோட்டங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளதால், யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க அங்குள்ள விவசாயிகள் தங்களது நிலத்தைச் சுற்றிலும் மின்வேலி அமைத்துள்ளனர். இந்நிலையில் விவசாயி தங்கவேல் தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற சத்தியமங்கலம் போலீசார், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விவசாய தோட்டத்தில் வனவிலங்குகளிடமிருந்து இருந்து பயிர்களை காக்க அமைக்கப்படும் மின் வேலியில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ச்சக் கூடாது என்ற விதிமுறை உள்ள நிலையில், விவசாயிகள் வன விலங்குகளிடமிருந்து பயிரைக் காக்கும் பொருட்டு உயர் அழுத்த மின்சாரம் பாய்ச்சுவதால் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.12 ஆயிரம் கோடி செலுத்தல்: மோடி பெருமிதம்