ஈரோடு: பலகாரப் பொருட்கள் தயாரிப்பில், ஆவினில் தயாரிக்கப்பட்ட 2,500 கிலோ நெய்யினை பதுக்கி, கள்ளச்சந்தைகளில் விற்பனை செய்து, ரூ.12 லட்சம் முறைகேடுகள் செய்த ஆவின் நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், “ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் நிறுவனம் மூலம் இனிப்பு, காரம் உள்ளிட்ட பலகாரப் பொருட்கள் அதிகளவில் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2021ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, ஈரோடு ஆவின் நிறுவனத்தில் இனிப்புகள் தயாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
மேலும், ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் நெய் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பலகாரப் பொருட்கள் தயாரிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், ஈரோடு ஆவின் நிறுவனம் அரசு உத்தரவின்படி, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் பலகார தயாரிப்புப் பணிகளை வழங்காமல், தரச்சான்றிதழ் இல்லாத மற்ற சாதாரணக் கடைகள் மூலம் ரீஃபெண்ட் ஆயில்களைப் பயன்படுத்தி பலகாரப் பொருட்களை தயார் செய்தது.
இதன் மூலம் ஆவினில் தயாரிக்கப்பட்ட 2,500 கிலோ நெய்யினை பதுக்கி, கள்ளச்சந்தைகளில் விற்பனை செய்து, சுமார் 12 லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளனர். இதற்கு காரணமாக இருந்த ஈரோடு ஆவின் நிதிமேலாளர் சபரிராஜன், மார்க்கெட்டிங் மேலாளர் மோகன்குமார், உதவி பொதுமேலாளர் சண்முகம் மற்றும் கோவை ஆவின் பொது மேலாளர் பாலபூபதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த சிவசுப்ரமணியம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை கோயில் இரண்டாம் நாள் தீபம்: ஜோதிப்பிழம்பாக காட்சியளித்த அண்ணாமலையாரை பக்தர்கள் தரிசனம்!