ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அருகேயுள்ள காவிலிப்பாளையத்தைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவர் தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்திற்கு நில உரிமைச் சான்றிதழ் வேண்டுமெனக் கூறி புளியம்பட்டியில் கணினி மையம் நடத்திவந்த ராமசாமியை அணுகியுள்ளார். திருமூர்த்தியிடம், ராமசாமி நம்பியூர் வட்டாட்சியர் தனக்குத் தெரிந்தவர்தான் என்றும், எந்தப் பிரச்னையுமின்றி சான்றிதழ் பெற்றுத்தருவதாகவும் கூறியுள்ளார்.
இதனை உண்மையென நம்பிய திருமூர்த்தி சான்றிதழ் பெறுவதற்கான ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு, அதற்கான பணத்தையும் கொடுத்துச் சென்றுள்ளார். தொடர்ந்து ராமசாமி 10 நாள்களுக்குப் பிறகு சான்றிதழைத் திருமூர்த்தியுடன் வழங்கியுள்ளார். சான்றிதழைப் பெற்றுக்கொண்ட திருமூர்த்தி, சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று அச்சான்றிதழைக் கொடுத்துள்ளார். சான்றிதழைப் பரிசோதித்த அலுவலர்கள் அது போலியானது என்று தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து திருமூர்த்தி போலியாக நில உரிமைச்சான்றிதழ் தயாரித்து வழங்கிய ராமசாமி மீது மாவட்டக் குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கணினி மையம் நடத்திவந்த ராமசாமி போலி முத்திரைகளைக் கொண்டு நிலஉரிமைச் சான்றிதழைத் தயாரித்து, அதில் வட்டாட்சியர் கையெழுத்தையும் போலியாக இட்டதும் தெரியவந்தது.
தொடர்ந்து அரசு முத்திரைகளைத் தவறாகப் பயன்படுத்தி போலியாக நிலஉரிமைச் சான்றிதழைத் தயாரித்த ராமசாமியைக் கைதுசெய்த காவல் துறையினர், அவர் நடத்திவந்த கணினி மையத்துக்கும் சீல் வைத்தனர். மேலும் அவரிடமிருந்து போலி முத்திரைகள், நிலஉரிமைச் சான்றிதழ்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட போலி ஆவணங்கள், கணினிகள், ஜெராக்ஸ் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ராமசாமியை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: "மோடியின் போலியான பிம்பம் அவருக்கு பலம், ஆனால் நாட்டிற்கு..." - தாக்கும் ராகுல்