ஈரோடு மாநகராட்சியின் 19ஆவது வார்டில் குறைந்தழுத்தம் மின் விநியோகத்தால் மின்சாதனப் பொருள்கள் பழுதடைந்துள்ளதாகக் கூறி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாநகராட்சி 19ஆவது வார்டுக்குள்பட்ட வெட்டுகாட்டுவலசு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். கடந்த ஒரு மாதமாக இந்தப் பகுதியில் சீரான மின் விநியோகம் செய்யப்படவில்லை என்பது பொதுமக்களின் புகாராகும்.
மேலும், குறைந்தழுத்த மின் ( Low Voltage Power) விநியோகத்தால் வீட்டில் உள்ள குளிர்சாதனப்பெட்டி, தொலைக்காட்சி பெட்டி, மின் மோட்டார் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் பழுதடைந்து பொருள்செலவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ‘எக்குத்தப்பாக நடந்துகொண்டால் கதை கந்தலாகிடும்’ - வடகொரிய அதிபருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
இது தொடர்பாக மின்வாரிய அலுவலர்களிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தியடைந்த 50-க்கும் மேற்பட்டோர் நாராயணவலசில் உள்ள மின்வாரிய உதவிப் பொறியாளர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வீரப்பன்சத்திரம் காவல் துறையினர், முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லவைத்தனர்.