ஈரோடு மாவட்டம் 56ஆவது வார்டில் மோசிகீரனார் வீதி பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட்டுள்ள பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்காக கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு தொடங்கப்படாமல் உள்ளது.
மழைக்காலங்களில் கழிவுநீர் வெளியேறி குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்து கொள்வதால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகாரளித்தும், அதிகாரிகள் எவ்வித நடடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது அப்பகுதி மக்களின் புகார். இந்நிலையில், கடந்த இரு தினங்களாக இரவு நேரங்களில் பெய்த மழையால் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து வெளியேறிய கழிவுநீர், குடியிருப்புப் பகுதியைச் சூழ்ந்துள்ளது. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் மாநகராட்சிக்குச் சொந்தமான வாகனத்தை இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீஸார், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.