சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி நகர் பகுதியில் ஓசூர் சாலையில் சுப்பிரமணியம் என்பவருக்குச் சொந்தமான பண்ணாரி அம்மன் ஏஜென்சி என்ற பெட்ரோல் சேமிப்பு நிலையம் செயல்பட்டுவருகிறது. இந்த பெட்ரோல் சேமிப்பு நிலையத்தில் பெட்ரோல் நிரப்பிய வாகன ஓட்டிகள் சிறிது தூரம் சென்றதும் வாகனம் இயங்காமல் என்ஜினில் அடைப்பு ஏற்பட்டு நின்றதால் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து இருசக்கர வாகனம் பழுது பார்ப்பவர்களிடம் கேட்டபோது பெட்ரோல் நிறம் சற்று மாறி உள்ளதால் கலப்படம் இருக்கலாம் எனக் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பெட்ரோல் சேமிப்பு நிலையத்தை முற்றுகையிட்டு, 'கலப்படம் செய்யப்பட்ட பெட்ரோல் விற்பனை செய்து வருகிறீர்களா?' என கேள்வி எழுப்பி சலசலப்பில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாளவாடி காவல் துறையினர் விசாரித்தபோது, பெட்ரோல் சேமிப்பு நிலையத்துக்கு பெட்ரோல் டேங்கர் லாரி லோடு வந்ததாகவும் அப்போது தரைமட்ட டேங்கில் பெட்ரோல் நிரப்பிய பிறகு இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பியதாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, காவல் துறையினர் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதை நிறுத்தி வைக்குமாறும், இது குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட பெட்ரோலிய நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து சோதனை செய்து கலப்படத்தை கண்டுபிடித்த பின்னர் பெட்ரோல் நிரப்பும் பணியை தொடருமாறும் பெட்ரோல் சேமிப்பு நிலையத்தில் ஊழியர்களிடம் கூறிவிட்டு வாகன ஓட்டிகளை சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து வாகன ஓட்டிகள் போராட்டத்தை கைவிட்டு திரும்பிச் சென்றனர். வாகன ஓட்டிகள் பெட்ரோல் சேமிப்பு நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.