ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வாரச்சந்தை அருகே கருப்பு நிற தெருநாய் ஒன்று பத்து நாட்களுக்கு முன் வந்து சேர்ந்தது. அங்கு பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் விவசாயத் தொழிலாளர்கள் கட்டிட தொழிலாளர்கள் ஒன்றுகூடி வேலைக்குச் செல்வார்கள். அப்போது தொழிலாளர்களிடம் பழகிய கருப்பு நாய் அனைவரிடத்திலும் அன்பாக பழகியது. இதனால் கருப்பன் என பெயர் வைத்தனர்.
கட்டட தொழிலாளர்கள் கருப்பன் கூறினால் அங்கு வந்து வாலை ஆட்டிக்கொண்டு அவர்கள் கொடுக்கும் பொருளை சாப்பிடும். அவர்கள் பிஸ்கட், தாங்கள் கொண்டு வந்த உணவுப் பொருட்களை கருப்பனுக்கு வழங்கினர். தெரு நாய் கருப்பனுக்கும் மக்களுக்கும் இடையே மிகுந்த நெருக்கம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி சிலர் கருப்பனை காணவில்லை என்றால் தூங்கக்கூட மாட்டார்களாம். நாளடைவில் தெரு நாய்க்கும் மக்களுக்கும் இடையேயான பந்தம் உறுதியானது.
இந்நிலையில் தெரு நாய் கருப்பன் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் நாயை நல்லடக்கம் செய்து, அதனை பிரிய மனம் இல்லாமல் பிளக்ஸ் பேனர் வைத்து மரியாதை செலுத்தி வருத்தத்தை தெரிவித்தனர். இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் அதேபோல் இந்த நாய் என்று ஊர் சொல்ல வேண்டும் என பேனர் வைத்து அதற்கு மதிப்பளித்து இரங்கல் தெரிவித்தனர் ஈரோடு மக்கள்.
இதையும் படிங்க...70 அடி பாஜக கொடிக்கம்பம் இரவோடு இரவாக இடித்து அகற்றம்!