கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மக்களும் தங்களது வேலையினை இழந்து உணவிற்கு மிகுந்த சிரமப்பட்டு வருகின்ரனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணம்பாளையம், லக்காபுர மக்கள் மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்களும் தங்களுக்குத் தற்போது வரை கிடைக்கப்பெறவில்லை என்றும், நியாயவிலைக் கடைகளில் இதுவரை கிடைத்த அரிசியும் தரமற்றதாகவும், கலப்படமானதாகவும் உள்ளதென்று, குற்றம் சாட்டிவருகின்றனர்.
இதே சமயத்தில் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் மாவட்ட நிர்வாகமும், அதிமுகவினரும் தாமாக முன்வந்து மக்களைத் தேடிச் சென்று அத்தியாவசியப் பொருள்களை வழங்கி வருவதாகவும், தாங்கள் (கிருஷ்ணம்பாளையம்) இதுகுறித்து கேட்டதற்கு 'காசு வாங்கிக்கொண்டுதானே வாக்களித்தீர்கள்' என அலட்சியமாக பதிலளித்ததாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, ஒரு மாதத்திற்கு மேலாகியும்; தாங்கள் எப்படி நிலைமையை சமாளித்து வருகிறோம் என்றுகூட தற்போதுவரை கவனிக்காமல் இருப்பதாகவும் கிருஷ்ணம்பாளையப் பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதனால், அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தற்போதுவரை தங்களுக்குத் தேவையான தண்ணீர் உள்பட அனைத்துப் பொருள்களையும் தாங்கள் விலைகொடுத்தே வாங்கி வருவதாகவும், தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் எனவும் கூறியுள்ளனர்.
இது தொடர்பான தகவல்களை வருவாய்த்துறை, மாவட்ட நிர்வாகம், சட்டப்பேரவை உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துச் சென்றனர்.
மேலும், இப்பகுதி மக்களுக்கு குடும்ப அட்டைகள் கிடைத்திடவும், குடும்ப அட்டைகள் இல்லாதவர்களுக்கும் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதற்குரிய அனுமதி பெற்றுத் தருவதாகவும் அரசு அலுவலர்கள் உறுதியளித்தனர்.
இதையும் பார்க்க:அத்தியாவசிய பொருள்களுக்கு சீரான விலை நிர்ணயம்!