ஈரோடு: மேட்டூர் சாலையில் உள்ள வணிக வளாகத்தின்கீழ் பகுதியில், செல்போன் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் பங்குதாரராக ஈரோட்டைச் சேர்ந்த பூபதி, கோயம்புத்தூரைச் சேர்ந்த தரணிதரன் உள்ளனர். இந்த கடையில் விலை உயர்ந்த செல்போன்கள் விற்கப்பட்டு வருகின்றன.
இந்தக்கடையில் வேலை பார்க்கும் கவுதம், கார்த்திக் ஆகிய இருவரும், நேற்று (டிசம்பர் 6) காலை வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து கடையை பூட்டிச் சென்றுள்ளனர். இந்நிலையில், இன்று (டிசம்பர் 7) காலை கடையைத் திறந்த போது, கடையில் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ந்து போன கவுதம் மற்றும் கார்த்திக், இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், கடைக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது கடையில் இருந்து 50 விலை உயர்ந்த செல்போன்கள், லேப்டாப் மற்றும் டேபிளில் இருந்த ரூ.5000 ரொக்கப் பணம் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் கடையில் உள்ள கண்ணாடி உடைந்து சிதறி கிடந்தது. அதில் ரத்தக்கறையும் படிந்திருந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி-யை காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.
அதில் இன்று அதிகாலை 5 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் கையில் சாக்கு பையுடன் செல்போன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே செல்வதும், பின் கடையில் இருந்த கண்ணாடியை உடைத்து விலை உயர்ந்த செல்போன்கள், லேப்டாப்பை திருடிக்கொண்டு சாக்கு மூட்டையில் போட்டு தப்பிச் செல்வதும் பதிவாகி இருந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவரைத் தேடி வருகின்றனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நகைக்கடை உரிமையாளருக்கு துப்பாக்கியால் மிரட்டல்!