ஈரோடு மாவட்டத்தின் மையப்பகுதியில் நேதாஜி தினசரி காய்கறிச்சந்தையில் மொத்தம், சில்லறை விற்பனைக் கடைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டுவந்தன. கரோனா நோய்த்தொற்று காரணமாக சந்தை செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதியை மறுத்தது.
இதையடுத்து, கடைகள் தகுந்த இடைவெளியுடனும் கட்டுப்பாடுகளுடனும் பேருந்து நிலையத்தில் காலை 6 மணி முதல் 9 மணி வரையில் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு காய்கறி விற்பனைசெய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
அதன்படி, கடந்த இரண்டு மாதங்களாக காய்கறிக் கடைகள் ஈரோடு பெரிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவந்தன. இந்நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்தவுடன் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவந்த காய்கறிக் கடைகளை பேருந்து நிலையம் அருகே உள்ள வ.உ. சிதம்பரனார் பூங்கா பகுதியில் மாற்றம்செய்ய மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள் கடுமையான வெயிலின் தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் காய்கறிகளை இருப்புவைக்க முடியாமல் வீணாகிவருவதுடன் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனத் தங்களது வேதனையைக் கூறினர்.
மேலும், தற்போது ஈரோட்டில் துணிக்கடைகள், மதுபான கடைகள் எனப் பல்வேறு கடைகள் திறக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர்கள், இதனால் ஏற்கனவே நேதாஜி காய்கறிச்சந்தையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கான்கிரீட் தளத்தில் உள்ள கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி 200-க்கும் மேற்பட்டோர் திடீரென ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற ஈரோடு நகர காவல் துறையினர், கரோனா தொற்று பரவும் அச்சம் நிலவுவதால் ஒன்றுகூடுவதை அனுமதிக்க முடியாது என்று எச்சரித்து அனுப்பிவைத்தனர். அதையடுத்து வியாபாரிகள் தங்களின் கோரிக்கையை மனுவாக மாநகராட்சி அலுவலர்களிடம் வழங்கினர்.
இதையும் படிங்க: விளைச்சல் அமோகம்: எலுமிச்சை விவசாயிகள் மகிழ்ச்சி!