ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் மற்றும் நீலகிரி பகுதிகளில் கடந்த மாதம் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது. அணை நிரம்பியதால் அணையிலிருந்து கீழ்பவானி பாசன கால்வாய், தடப்பள்ளி அரக்கன்கோட்டை கால்வாய் மற்றும் காலிங்கராயன் கால்வாய் பாசனங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி பாசன கால்வாய் முதல் போகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அணையிலிருந்து கீழ்பவானி பாசன கால்வாய்ப் பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கீழ்பவானி பாசனப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக விவசாய முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமடைந்து வந்தன. அணையிலிருந்து வழக்கத்தை விட அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் ஆரம்பக்கட்ட விவசாயப் பணிகள் முடிவடைந்து தற்போது பெருந்துறை மற்றும் சென்னிமலைப் பகுதிகளில் நடவுப் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கீழ்பவானி பாசனக் கால்வாய்ப் பகுதி விவசாயிகள் பெரும்பான்மையானோர் நெற்பயிர்களை பயிரிட்டு வரும் நிலையில், கடந்தாண்டுகளைக் காட்டிலும் இந்தாண்டு அதிகளவில் நெற்பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்தாண்டு பயிரிட்ட அதே வகை அரிசி ரகங்களுக்கு மாற்றாக புதுவகை அரிசி ரகங்களை சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர்.
இதன் மூலம் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பதுடன் சாகுபடி, அறுவடைச் செலவுடன் முட்டுக்கட்டு செலவும் குறையும் என்பதால் அனைத்துத் தரப்பு விவசாயிகளும் நெற்பயிர்கள் நடவுப் பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர். மேலும் நடவுப் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நாத்துகளை தலையில் வைத்து ஆடிப்பாடியும் நாட்டுப்புறப் பாடல்களை பாடியும் உற்சாகமாக பணிகளை செய்துவருகின்றனர்.
கடந்தாண்டுகளை விட இந்தாண்டு நெற் பயிர்கள் அதிகளவில் விளையும் என்பதால் நெல் கொள்முதல் மையங்களை அதிகப்படுத்தி நெல்லுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்து நல்ல விலை கிடைத்திடுவதற்குரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள முன் வரவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் பண்ணை குட்டை திட்டம்!