ஈரோடு: தமிழ்நாட்டில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வறுமையில் இருந்து மக்களை பாதுகாக்க, அரசு கரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாயை ஒவ்வொரு குடும்ப அட்டைத்தாருக்கும் ஒதுக்கீடு செய்தது.
அதன்படி தமிழ்நாட்டில் கடந்த வாரம் அனைத்து ரேஷன் கடைகளிலும், கரோனா நிவாரண நிதி பெறுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டு, அதில் குறிப்பிடப்பட்ட தேதியில் நிதியை பயனாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்த விவசாயி சங்க பிரதிநிதி கணேசன், சத்தியமங்கலம், தோப்பூர் காலனியில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு கரோனா நிவாரண நிதியை வாங்க மறுத்த அவர், ரேஷன் பொருள்களை மட்டுமே வாங்கிவிட்டு வீடு திரும்பிவிட்டார். அவர் சென்ற சிறிது நேரத்தில் கரோனா நிதி அளிக்கப்பட்டதாக அவருக்கு செல்போனில் குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயி, உடனடியாக ரேஷன் கடைக்குச் சென்று அங்குள்ள பெண் ஊழியரிடம் அந்த குறுஞ்செய்தியை வைத்து வாதம் செய்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கும் நிவாரண நிதியை தான் வாங்காதபோது, நிதியைப் பெற்றுள்ளதாக வந்த தகவல் பொய்யானது என்றும் இதில் எப்படி முறைகேடு நடந்தது எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், டோக்கன் கொடுத்தால் தான் பணம் தருவார்கள் எனும்போது, டோக்கன் என்னிடம் உள்ளது என அங்கிருந்த பொதுமக்கள் முன் ரேஷன் ஊழியரிடம் கேட்டுள்ளார்.
எந்த கேள்விக்கும் அசராத ரேஷன் கடை பெண் ஊழியர், கணேசன் மீதே குற்றம் சுமத்தியுள்ளார். இதையடுத்து ரேஷன் கடை ஊழியரின் முறைகேடான செயலைக் கண்டித்து வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், அலுவலர்களும் கண்டு கொள்ளாதபோது ரேஷன் கடை முன் காணொலி எடுத்து, அதை அனைத்து வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்.
ஏழைகளுக்கு மட்டுமேயான நிவாரணத்தை தான் பெறக்கூடாது என்ற கொள்கையோடு வாழும் விவசாயி கணேசனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு சமூக ஆர்வலர்கள் இதனை அரசின் கவனத்துக்கு தற்போது கொண்டு வந்துள்ளனர்.