ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையின் கரையையொட்டி வனப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது.
இதன் காரணமாக யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு, குடிநீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமங்களில் நுழைந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு போன்ற பயிர்களை சேதப்படுத்துகின்றன.
இந்நிலையில், கரைப்பகுதியில் உள்ள புங்கார் பழத்தோட்ட பகுதிக்கு ஐந்து யானைகள், குட்டிகள் உள்ளிட்டவை வந்தன. இதைத் தொடர்ந்து, கரையோரத்தில் உள்ள புற்கள், செடிகொடிகளை தனது தும்பிக்கைகளை பயன்படுத்தி உட்கொண்டன.
பின்னர் கசிவு நீரை குடித்துவிட்டு அருகிலுள்ள முட்புதர் காட்டில் முகாமிட்டன. கரையோரத்தில் புங்கார், பெரியார் நகர், சுஜில்குட்டை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர் தங்களது ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வது வழக்கம்.
தற்போது யானைகள் அணையின் கரைப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் மீனவர்கள், கால்நடைகளை மேய்ப்பவர்கள் கவனத்துடன் இருக்குமாறு வனத்துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:இடிந்து விழும் நிலையில் அரசு விடுதி: சீரமைக்கக் கோரும் மாணவர்கள் !