ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை இந்திய தலைமைத்தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் வெளியிட்டார்.
இது தொடர்பான அரசின் அறிவிக்கை வரும் ஜனவரி 31ஆம் தேதி வரும் என்றும், இத்தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்ய கடைசி நாள் வரும் பிப்ரவரி 7ஆம் தேதியும், அதனை மறுபரீசிலனை செய்ய 8ஆம் தேதியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மனுவை வாபஸ் பெற வரும் பிப்ரவரி 10ஆம் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வரும் 27ஆம் தேதி தேர்தலும், வரும் மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.
அதேபோல், லட்சத்தீவு பழங்குடியின தொகுதிக்கும், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள லும்லா என்னும் பழங்குடியின தொகுதிக்கும் ஜார்க்கண்ட் மாநிலம், ராம்கர் தொகுதிக்கும், மேற்கு வங்காளத்தில் உள்ள சகார்திகை தொகுதிக்கும், மகாராஷ்டிர மாநிலத்தில் கஸ்பா பெத் என்னும் தொகுதிக்கும் சின்ச்வாட் தொகுதிக்கும் இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திரிபுராவிற்கு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 16ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலும், நாகாலாந்து மற்றும் மேகாலயாவிற்கு வரும் 27ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான முடிவுகள் வாக்கு எண்ணிக்கை நாளான மார்ச் 2ஆம் தேதி மூன்று மாநிலங்களுக்கும் ஒன்றாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.