ஈரோடு மாவட்டம் திண்டலில் வசித்து வருபவர்கள் சதீஷ் - சாவித்திரி தம்பதியினர். இவர்களுக்கு அகதீஷ் என்ற மகன் உள்ளார். இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அகதீஷிற்கு ஊர்களின் பெயர் குறித்து அறிந்து கொள்ள ஆர்வம் இருந்தததை அறிந்த அவரது பெற்றோர் உலக வரைபடம் மற்றும் உலகம் மாதிரி உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்து சிறுவனது ஆர்வத்திற்கு ஊக்கம் அளித்துள்ளனர்.
சிறுவனும் ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஊர்கள் மற்றும் மாவட்டங்கள் பற்றி தெரிந்து கொண்டார். பின்பு ஆர்வம் அதிகரிக்கவே இந்தியாவில் உள்ள ஊர்கள் மற்றும் மாநிலங்களின் பெயர்களையும் சரளமாக சொல்லும் அளவிற்கு அறிந்துகொண்டுள்ளார். மேலும் இந்த அறிவாற்றலை பயன்படுத்தி பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளிலும் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளையும் பெற்று அசத்தியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அகிதீஷின் பார்வை உலக நாடுகள் மேல் விழுந்துள்ளது. தொடர்ந்து கற்றுக்கொண்ட பயிற்சியினால் தற்போது உலக நாடுகளின் பெயரையும் அதன் தலைநகரங்களையும் தெரிந்துகொண்டுள்ளார்.
இதனைக்கண்ட சிறுவனின் பெற்றோர் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸுக்கு பதிவு செய்துள்ளனர். அதையடுத்து சிறுவனது திறமையை அங்கீகரித்து (child with excellent knowledge of geography) இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் அளித்து சிறப்பித்தனர். இது சிறுவனது பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறுவனது அடுத்த இலக்கு உலகில் உள்ள அனைத்து சுற்றுலாத் தளங்களின் பெயர்கள் மற்றும் சிறப்புகள் பற்றி தெரிந்துகொள்வது என பெற்றோர் தெரிவித்துள்ளனர். மேலும் அகதீஷை நன்றாக படிக்க வைத்து பெரிய விஞ்ஞானியாக வளர்ப்பதே தங்களது விருப்பம் என்று தெரிவித்துள்ளனர்.