ஈரோடு - பவானிசாகர் அருகேயுள்ள விளாமுண்டி வனப்பகுதியில் உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் தொட்டம்மாள், சின்னம்மாள் என்றழைக்கப்படும் மகாலட்சுமி, பொம்மையன், பொம்மி கோயில்களில், ஆண்டுதோறும் மஹா சிவராத்திரியன்று பக்தர்கள் தானே தலையில் தேங்காய் உடைத்துக்கொள்ளும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இவ்விழாவில் கோவை மாவட்டம் கல்வீராம்பாளையம், வடவள்ளி, உச்சையனூர், தடாகம், வரப்பாளையம், பன்னிமடை, தீத்திபாளையம், ஓநாய்பாளையம், பூச்சியூர், சுண்டப்பாளையம், தொண்டாமுத்தூர், கெம்பனூர், வன்னிக்காரம்பாளையம், பச்சாபாளையம், பெரியநாயக்கன்பாளையம், கஸ்தூரிபாளையம், கோவிந்தபாளையம், இடிகரை, வீரபாண்டிபுதூர் கிராமங்களில் இருந்து 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.
வெள்ளிக்கிழமை மகாலட்சுமி மற்றும் பொம்மையன், பொம்மி ஆலயங்களில் அலங்கார பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் வாத்தியங்கள் முழங்க மூன்று ஆலயங்களிலும் சாமி முன்பு வைக்கப்பட்டிருந்த தேங்காய்களை எடுத்து வந்து கோயிலின் வெளியே பக்தர்கள் தங்களது தலையில் உடைத்து வழிபட்டனர்.
இவ்வாறு வழிபடுவதால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நோய்கள் அண்டாமல் இருக்கும் என்றும் பக்தர்கள் கருதுகின்றனர். இவ்விநோதத் திருவிழாவை சுற்றுவட்டார மக்கள் வந்து கண்டுகளித்தனர்.
இதையும் படிங்க: மகா சிவராத்திரி: ஆலயங்களில் குவிந்த பக்தர்கள்!