ஈரோடு சூளையை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி தனலட்சுமி. ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் செயல்படும் ஆவின் நிறுவனத்தில் கடந்த 1991ஆம் ஆண்டு முதல் தனலட்சுமி அலுவலக உதவியாளராக பணியாற்றிவருகிறார். இவருக்கு உயர் அலுவலர்களால் பல்வேறு அச்சுறுத்தல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 முறை இடமாறுதலும் செய்யப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த தனலட்சுமி அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தனது மனைவியின் தற்கொலை முயற்சிக்கு காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரின் கணவர் கோரிக்கை விடுத்துள்ளார். தொடர் இடமாற்றத்தால் ஆவின் நிறுவன பெண் உதவியாளர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : லாரி ஒர்க்ஷாப்பில் பயங்கர தீ விபத்து - ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்!