ஈரோடு அய்யன்காடு பகுதியைச் சேர்ந்தவர் துரையன். கட்டடக் கூலித் தொழிலாளியான இவர் நேற்றிரவு பணியை முடித்துக்கொண்டு தனது நண்பர்களுடன் ஈரோடு பவானி பிரதான சாலைப் பகுதியிலுள்ள நெரிகல்மேடு அரசு மதுபானக் கடைக்கு மது அருந்த சென்றுள்ளார்.
அங்கு மூவரும் அளவுக்கதிகமாக மது அருந்தியதால் ஏற்பட்ட மிதமிஞ்சிய போதையின் காரணமாக ஒருவருக்கொருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் வாக்குவாதம் முற்றி மூன்று பேருக்குள் தகராறும் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இருவர் துரையனை பலமாக அடித்துக் காயப்படுத்தியதுடன் தலையில் கல்லைப் போட்டுவிட்டு தப்பித் தலைமறைவாகினர்.
இதனைத் தொடர்ந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த துரையனை மீட்ட மதுபானக் கடையில் வேலை செய்வோர் அவரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் இதுகுறித்து கருங்கல்பாளையம் காவல்நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட துரையன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நண்பரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய இருவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக நடந்ததா வேறு ஏதேனும் காரணத்தால் கொலை நடைபெற்றதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.