ஈரோடு மாவட்டம் விசைத்தறி தொழிலுக்குப் பெயர் பெற்ற மாவட்டமாகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டுவருகின்றது. இந்நிலையில் நாளுக்குநாள் நூல் விலையின் மாற்றம் காரணமாக விசைத்தறி தொழிலாளர்கள் நஷ்டமடைந்துவருகின்றனர்.
இதனால், ஈரோடு மாவட்ட சித்தோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர், விசைத்தறி உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து சித்தோட்டில் உள்ள ஐந்தாயிரம் விசைத்தறி தொழிற்சாலைகளில் உள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளை இயக்காமல் நிறுத்திவைத்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், நூல் விலை தொடர்ந்து சரிந்துவருகிறது. இதன் காரணமாக, எங்களின் துணி ரகங்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் சரிந்துவரும் நூல் விலையை காரணம்காட்டி குறைந்த விலைக்கே கொள்முதல் செய்துவருகின்றனர். இதனால் நாங்கள் உற்பத்தி செய்யும் துணி வகைகளை நஷ்டத்தில் விற்பனை செய்யும் நிலை உருவாகியுள்ளது.
எனவே, நூல் விலையை மாதமொன்றுக்கு ஒரே விலையென நிர்ணயிக்க தமிழ்நாடு துணிநூல் துறைக்கு கோரிக்கை விடுத்து இப்போராட்டத்தை தொடங்கியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:
'வேலைக்கு தகுந்த கூலி இல்லை' - விசைத்தறி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!